கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் வனவிலங்குகளால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உயிர், பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி செல்வது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனை பிடிக்க வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டுகளை வைத்து கண்காணித்தும் வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எந்த சிறுத்தையும் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கவில்லை.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தாளியூர் செல்லும் சாலையில் உலியம்பாளையம் பகுதியில் உள்ள சாலையில் ஓரத்தில் இருந்த பூனை குட்டிகளை கண்ட அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை அந்தப் பூனைகளை பிடிக்கச் சென்றது. அதில் ஒரு பூனை தப்பிய நிலையில் மற்றொரு பூனையை கவ்விக் கொண்டு சென்றது. பூனையின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த நாய் ஒன்று குரைத்துக் கொண்டு சிறுத்தையின் பின் தொடர்ந்து சென்றது.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.