• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்..,

ByRadhakrishnan Thangaraj

Oct 31, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் சதீஷ்குமார்.இவர் குடும்பத்துடன் கோட்டைப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் முகநூலில் சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தவறாக பதிவிட்டதாக வழக்கறிஞர் சதீஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் அவரது உடல்நிலை காரணம் காட்டி மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததாகவும் பின்னர் முத்துகிருஷ்ணனை சி.ஆர்.பி.சி.பிரிவு 41 இன் படி நகர் போலீசாரே விடுவித்து விட்டதாகவும் வழக்கறிஞர் சங்கம் புகார் செய்தது இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத்தினர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட முத்துகிருஷ்ணனை உடனடியாக கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பல்வேறு போராட்டங்களை கடந்து சில நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்தி வருகிறது.

நீதிமன்ற புறக்கணிப்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டம் என பல்வேறு வழிகளில் வழக்கறிஞர் சங்கம் போராட்டத்தை கையில் எடுத்து நடத்தி வந்த நிலையில் முத்துகிருஷ்ணனை தனிப்படை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருவதாக கூறிவந்த நிலையில் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று கூடி பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே சங்கத் தலைவர் ராஜைய்யா செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து சுமார் 3 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வாகனங்கள் பல்வேறு வழியில் திருப்பி விடப்பட்டனர். தகவல் அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் கைவிடப்படாத நிலையில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி அசோகன் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டப்பட்ட முத்துகிருஷ்ணன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் இந்த வழக்கினை விசாரிக்க கூடாது.

அவர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி இரண்டு கோரிக்கைகளை காவல்துறை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மாவட்ட அளவில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஒன்று திரண்டு நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தி விருதுநகரில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மாவட்ட எஸ்பி இடம் இது குறித்து முறையிட போவதாக கூறினார் இதைத் தொடர்ந்து சாலை மறியல் முடிவடைந்தது.