• Fri. Apr 26th, 2024

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகம் சீர்கேடான நிலையில் இருந்ததாகவும், பாதாளத்தில் தள்ளப்பட்டு இருந்ததாகவும் பேசியுள்ளார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி அது முற்றிலும் தவறானது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளையும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் என்னால் பட்டியலிட முடியும். அதற்காக அ.தி.மு.க. அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதே சாட்சி.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்தன. இதை வைத்தே தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது. தமிழகத்தில் 2 ஆயிரத்து 138 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் தூங்கி எழும்போது கட்சிக்காரர்களால் என்ன பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களை கண்டு தமிழக மக்களின் வயிறு எரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தடுக்காமல் முதல்-வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டுவதில் மட்டுமே குறியாக உள்ளார். அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருந்தது. ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அம்மா சிமெண்டு, பெண்களுக்கான மானிய விலையில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம், திருமண பெண்களுக்கான தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்போதைய தி.மு.க. அரசால் முடக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் தற்போதைய தி.மு.க. அரசு திறந்து வைத்து வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *