தமிழகத்தில் உள்ள ஜவுளிதுறைகளில் வேலை பெறுவதற்காக வங்கதேச முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது..,
அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள். அங்குள்ள மோசமான சூழல் காரணமாக அவர்கள் தமிழக ஜவுளி துறையில் பணியில் சேர்வதற்காக அசாம் எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர். குறைவான கூலிக்கு ஆட்கள் கிடைப்பதால் தமிழக ஜவுளி துறை உரிமையாளர்களும் அவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்துக்கள் இந்த மோசமான அடக்குமுறை சூழ்நிலையிலும் அந்த நாட்டை விட்டு வெளியேறவில்லை. இதிலிருந்து அவர்கள் எவ்வளவு தேசபக்தி உடையவர்கள் என்பதை உணரலாம்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மிகவும் பக்குவமானவர்கள். கடந்த ஐந்து மாதங்களாக ஒரு வங்கதேச இந்துகூட எல்லையை கடந்து அசாமுக்குள் நுழையவில்லை என்பதே உண்மை.
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைத்து வருகிறார்.
வங்கதேசத்தில் காணப்படும் கலவர சூழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கடந்த 5 மாதங்களாகவே சட்டவிரோதமாக அசாமுக்குள் நுழைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தினமும் 20 முதல் 30 பேர் வரை அசாம் மற்றும் திரிபுரா எல்லையில் அத்துமீறி நுழைய முற்படுகின்றனர். ஆனால், அவர்களை அசாம் அரசு கைது செய்வதில்லை . அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைத்து விடுகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் (என்இசி) ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் இதுகுறித்து பேசியுள்ளேன். இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
வங்கதேச முஸ்லீம்கள் எல்லையில் அதிக அளவில் ஊடுருவல்
