சென்னையில் பட்டா வழங்க ரூபாய் 15ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் அம்பலப்பட்டு சிக்கி வருவது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு விஏஓ முதல் தாசில்தார்கள் வரை விதிவிலக்கில்லை. அந்தவகையில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விவகாரங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகி கொண்டே வருகிறது. இதனை களைவதற்காக தமிழக அரசு ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும்கூட, முழுமையான பலனை தரவில்லை. பெண் அதிகாரிகளும், லஞ்சம் வாங்கி நாளுக்கு நாள் கைதாகி வருகிறார்கள். தாசில்தார்: விஏஓ முதல் தாசில்தார் வரை, லஞ்ச விவகாரங்களில் சிக்கி கைதாவது, மீடியாக்களில் அம்பலமானாலும், அடுத்தடுத்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்ந்து கைதாகி கொண்டுதான் வருகிறார்கள். நேற்றைய தினம், சென்னையில் சர்வேயர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.. பட்டாபிராம், கோபாலபுரம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்.. 30 வயதாகிறது.. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ஆன்லைன் பட்டா பெறுவதற்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
பிறகு பட்டா பெறுவதற்காக, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவு ஆய்வாளராக பணியாற்றும் சுமன் என்ற நபரை அணுகியிருக்கிறார்.. சுமனுக்கு 30 வயதாகிறது.. பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சுமன்.. தன்னுடைய பட்டா விஷயம் குறித்து சுமனிடம் சந்திரன் கேட்கவும், ரூபாய் 15,000 லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா வழங்க முடியும் என்று கறாராக கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்த சந்திரன், லஞ்சம் தர விரும்பாமல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுமனுக்கு கொடுக்குமாறு சந்திரனிடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
அதன்படியே, பணத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருக்கிறார் சுமன். ஆனால், அங்கு சர்வேயர் இல்லாததால் அவரது உதவியாளரான ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பணத்தை தந்துள்ளார்.. அப்போது கையும் களவுமாக பொன்னையனைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, சுமன்தான், பணத்தை பெறும்படி பொன்னையனிடம் சொன்னாராம்.. இதை உறுதி செய்து கொண்ட போலீசார் சுமன் மற்றும் பொன்னையன் ஆகிய 2 பேரையுமே கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அளவு ஆய்வாளர் மற்றும் உதவியாளர் கைது
