• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

ஆண்டிபட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடி..,
பாதிக்கப்பட்டவர்கள் பத்திர பதிவு அலுவலகத்தை முற்றுகை போராட்டம்..!

போலி ஆவணங்களை வைத்து மோசடியாக நிலத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட மோசடிக்கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமர்ந்து உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரச நாயக்கனூர் கிராமம் பிட் 2, ராஜகோபாலன் பட்டியைச் சேர்ந்த சேர்ந்த வாசுதேவன், ராமக்காள், ரமேஷ், திருவேங்கடசாமி, உள்ளிட்ட 11 பேர்களுக்கு சொந்தமான ஒரே குடும்ப வகையறாவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் நிலம் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு தனிநபர்களுக்கு முறையாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. வாங்கிய இடத்திற்கு பட்டா உள்ளிட்ட ஆவணங்களையும் நிலத்தை வாங்கிய உரிமையாளர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மதுரையைச் சேர்ந்த தமிழ்செல்வி, தனலட்சுமி, கீதா, பாலசுப்ரமணியம் ,அலமேலு ,ஜானகி ,முருகேசன் ஆகிய ஏழு தனிநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக ஒரு பத்திரத்தை தயாரித்தனர். போலியாக தயாரித்த அந்தப் பத்திரத்தின் மூலம் சில தனி நபர்களுக்கு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். மோசடி கும்பலிடம் நிலத்தை வாங்கிய நில உரிமையாளர்கள் நிலத்தை அளவீடு செய்து பார்க்க நிலத்திற்கு சென்றபோதுதான் உண்மையான நில உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்த விசாரித்த போதுதான் அவர்களது நிலம் மதுரையைச் சேர்ந்த மோசடி கும்பல் போலி பத்திரம் தயாரித்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இன்று ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட உண்மையான நில உரிமையாளர்கள் ஆண்டிபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலி பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்ட தங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலி பத்திர பதிவிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு பத்திரப்பதிவுத்துறை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் செய்துள்ளனர். போலி பத்திரம் தயாரித்து போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டு நிலத்தை விற்பனை செய்த சம்பவமும், நிலத்தை மீட்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட நில உரிமையாளர்களின் போராட்டமும் ஆண்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.