ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த நெடுவாசல் என்ற கிராமம் உலகறியச் செய்தது. அந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களது கிராமத்திற்கு வேண்டாம் அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி நடத்திய போராட்டம் ஆனது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்குக் காரணம் இன்னொன்றும் உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களே இல்லை. அதேபோல் அந்த மக்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு ஆதரவாகவும் வந்து பேசிய தலைவர்கள் ஏராளமானோர். திரை பிரபலங்கள் முதல் இவர் பிரபலமானவர் என்று சொல்லக்கூடிய யாராக இருந்தாலும் அத்தனை பேரும் நெடுவாசல் கிராமத்திற்கு அந்தப் போராட்ட காலத்தில் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த கிராமத்தில்தான் இப்போது இந்த பிரச்சனையும் புதிதாக கிளம்பி இருக்கிறது.


இது குறித்து தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் மாநிலத் தலைவர் அரங்க குணசேகரன் கூறுகையில் நெடுவாசல் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் ஓர் அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். காலம் காலமாக வழிபாடு நடத்தி வந்த நிலையில் இப்போது இந்த கோவிலைச் சுற்றி கற்கால்கள் நடப்பட்டு புல்வெளி கம்பி போட்டு அடைக்கப்பட்டுள்ளது. அய்யனார் கோவிலை மட்டுமல்ல அதில் உள்ள பரிவார தெய்வங்களையும் அனைத்து தரப்பு மக்களும் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். இதை செய்தவர்கள் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான். அதனால் மற்ற சமூகத்தினர் யாரும் அந்த கோவிலுக்குள் இப்போது போக முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 20 ஏக்கர் அளவுள்ள இந்த நிலத்தில் உள்ள கோவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது அல்ல. கிராம மக்களின் வழிபாட்டு தலமாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.
இந்த நிலையில் இப்போது அடைத்து வைத்திருப்பதால் யாரும் போக முடியாத நிலையை மாற்றி மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு வேலையை பிரித்து விட்டு கற்கால்களை அப்புறப்படுத்தி விட்டு அனைவரும் வழிபாடு செய்யும் விதமாக திறந்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்து அறநிலையத்துறை இடம் ஒப்படைக்க வேண்டும். இது குறிப்பிட்ட சமூகத்திற்கான கோவிலோ நிலமோ கிடையாது. அரசு புறம்போக்கு நிலம் ஆகும். இந்த ஆக்கிரமிப்பு எடுக்க வேண்டும் என்று கடந்த 22.9. மற்றும் 22 .10.2025 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது ஏற்பாட்டில் வட்டாட்சியரை கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய போது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எனவே இப்போது மூன்றாவது முறையாக எனவே இப்போது மூன்றாவது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம் . இப்போதாவது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.




