அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் ஜனவரி 3 -ம் தேதி பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பாஜக சார்பில் காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இப்போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தடையை மீறி மதுரையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்பட மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.