கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென் றவ்வே.
பாடியவர்: பரணர்
திணை: முல்லை
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் இளவேனிற்காலத்தில் (சித்திரை, வைகாசி மாதங்களில்) திரும்பி வருவதாகக் கூறிச்சென்றான். இப்பொழுது இளவேனிற்காலம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக வேப்ப மரங்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. ”தலைவன் வருவதற்குமுன் இந்த இளவேனிற் காலம் கழிந்துவிடுமோ? இன்னும் தலைவன் வரவில்லையே?” என்று தலைவி வருந்துகிறாள். தலைவனைப் பிரிந்திருப்பதால் வருத்தத்தோடு இருக்கும் தலைவியின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத அவ்வூர் மக்கள் அவளைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.
பாடலின் பொருள்:
இளவேனிற் காலம் வந்ததால், கரிய அடிப்பக்கங்களை உடைய வேப்ப மரங்களின் ஒளி பொருந்திய பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. என் தலைவன் வருவதற்கு முன்னரே இந்த இளவேனிற்காலம் கழிந்துவிடுமோ? ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த, வெண்மையான கிளைகளை உடைய அத்தி மரத்திலிருந்து விழுந்த ஒரு பழத்தைப் பல நண்டுகள் மிதித்துத்துக் குழைத்ததைப்போல், இவ்வூரில் உள்ள கொடிய மகளிருடைய நாக்கள் என் காதலர் என்னைவிட்டுச் சென்றதால் அலர் கூறி ஒலித்தன.