• Sun. Dec 1st, 2024

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்..!

Byவிஷா

Jul 6, 2022

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது. பக்தர்கள் வேண்டும் வரத்தை அளித்து காக்கும் தாயாக விளங்கி வருகிறது. இதனால் அம்மனைத் தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டில் தான் குடமுழுக்கு பணிகள் நடந்தன. அப்போது, மேற்கு, தெற்கு, வடக்கு வாசல்களில் இருந்த கலசக் கோபுரங்கள் அகற்றப்பட்டு புதிதாக 5 நிலைகளுடன் கூடிய கோபுரங்கள் கட்டப்பட்டன.


இதையடுத்து கருவறை விமானத்துக்கும், புதிய கோபுரங்களுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் கோயிலின் கிழக்கு வாசலில் ஏற்கனவே இருந்த கலசக் கோபுரத்தை இடித்துவிட்டு, 60 அடி நீளம், 43 அடி அகலம், 108 அடி உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் ஒன்று கட்டத் திட்டமிடப்பட்டது. கோயில் நிதி, உபயதாரர்களின் நிதி ஆகியவற்றின் மூலம் 2.25 கோடி ரூபாய் நிதியை கொண்டு 7 நிலைகளுடன் 108 அடி உயரத்துக்கு கட்டி முடிக்கப்பட்டது.
இதில் நிலைவாசல் ஒரே கல்லில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜகோபுரத்தின் உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த கோபுரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் 324 சுதை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வேண்டுதல் நிறைவேறிய பின்னர் பக்தர்களால் செய்யப்படும் நேர்த்திக் கடன்களான கரும்பு காவடி எடுத்தல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்டவை கோபுரத்தின் முதல் நிலையில் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி இரவு பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில் ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களை கொண்டு புனித நீர் ஊற்றி இன்று (ஜூலை 6) காலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *