கோவை மாநகரத்திலுள்ள சலிவன் வீதியில், 160 வருடம் பழமை வாய்ந்த, அபய பிரத யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த கோவிலானது ராகவேந்திரா சுவாமிக்காக , கோவை மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் சன்னிதியும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அமைந்துள்ளது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமியும் உடன் யோக ஆஞ்சநேயரும், அருள்பாலிக்கும் இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற ஸ்தலமாகும். இங்கு, ஆஞ்சநேயர், சங்கு சக்கரம் தாங்கிய நிலையில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். கோவையின் மந்த்ராலயம் என்றழைக்கப்படும்.

இக்கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் உடுப்பி பலிமார் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ வித்யாதீர்த்த ஸ்ரீப்பாத சுவாமிகள், இளைய பட்டம் ஸ்ரீ, ஸ்ரீ வித்யா ராஜேஸ்வர தீர்த்த ஸ்ரீப்பாத சுவாமிகள் தலைமையில், திருவோண நடசத்திரத்தில் அஷ்டப்பந்தன மகா கும்பாபிசேஷக விழா நடைபெற்றது.

இவ்விழாவை நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் முன்னின்று நடத்தினார். விழாவில் அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு யோக ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திர சுவாமிகளை வழிபட்டனர். 48 நாட்களுக்கு யாக சாலையில் தொடர்ந்து பூஜைகள் நடக்க இருக்கிறது.