குஜராத் பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அப்போது ரந்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது.
அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையில் வைத்திருந்த 2½ வயது குழந்தை உள்பட 7 பேரை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 11 பேரும் ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருந்த னர். . இதையடுத்து கருணை அடிப்படையில் அவர்களை குஜராத் அரசு விடுவித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடன் வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்துக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம். பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.