• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ணனுடன் போராடும் கண்ணன்

பேரண்ட வெளி ‘ஓம்’ என்று இசைப்பதாகச் சொல்கிறார்கள் ஞானிகள். காலி டம்ளரை காதருகே வைத்தால்கூட கிட்டத்தட்ட அதுபோலத்தான் கேட்கிறது. நம் மனதுக்கு இசைவானதாக இருப்பதையெல்லாம் இசை வடிவாக ரசிக்க முடியும். இசைக்கு மொழி கிடையாது. ஆனால், ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான இசை உண்டு.
தமிழ், இசைக்கு இசைவான மொழி.

சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகய்யர் பாடியது சுந்தரத் தெலுங்கு கீர்த்தனைகள். அதில் பெரும்பாலான சொற்கள் சமஸ்கிருதம். ‘உஞ்சவிருத்தி’ எனப்படும். பசி நேரத்து உணவை மட்டும் யாசகமாகப் பெற்றுக் கொண்டு, இறைவனுக்கு இசைத் தொண்டு புரிவதே பிறவிப்பயன் என வாழ்ந்தவர் அவர். தஞ்சை சரபோஜி மன்னர் அழைத்தபோதும் அரண்மனைக்குப் போகாமல் திருவையாறிலேயே இருந்து ராமனைப் போற்றிப் பாடினார் தியாகய்யர்.

‘நிதி சால சுகமா ராமுனி
சந்நிதி சேவ சுகமா?” -என்ற அவரது கீர்த்தனையைப் பாடாத சங்கீத ஜாம்பவான்கள் இல்லை. அரண்மனைப் பணத்தை நாடிச் செல்வதைவிட ராமனின் சந்நிதியில் சேவை செய்வதே சுகம் என்றார் தியாகய்யர். அந்தக் கீர்த்தனையைக் கல்யாணி ராகத்தில் ஆலாபனை செய்து சபாக்களில் பாடும்போது, கூட்டம் மெய் மறக்கும்.

தியாகய்யரின் காலம் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையாகும். ஆனால் அவருக்கு 1000 ஆண்டுகள் முன்பாகவே,

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே
-என்று பாடியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். இந்திரலோகத்தை ஆளுகின்ற வாய்ப்பைக் கொடுத்தாலும் எனக்கு திருவரங்கத்தில் உள்ள தெய்வத்தைப் புகழ்ந்து பாடும் சுகத்தையும் சுவையையும்தான் விரும்புவேனே தவிர, இந்திரலோகத்தின் சுவை எனக்கு வேண்டாம் என்கிறார்.

‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ‘ என்பது கன்னட மொழியில் அமைந்த ஒரு கீர்த்தனை. வியாசராஜா என்பவர் யமுனாகல்யாணி ராகத்தில் இயற்றியது. கிருஷ்ணரின் அழகையும் ஆட்டத்தையும் வர்ணிக்கும் இந்தப் பாடலை சபாக்களில் மனமுருகிப் பாடுவார்கள். கிருஷ்ணன் குழந்தையாக மேடையில் தவழ்ந்தது போல் இருந்தது என அதற்கு விமர்சனம் எழுதுவார்கள். தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடும்போது கிடைக்கும் சுவை தமிழில் இருக்காதா?

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் எழுதிய “ஆடாது அசங்காது வா கண்ணா.. உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்து ஆடுதே” என்ற பாட்டும், அதை மகாராஜபுரம் சந்தானம் பாடுவதும், கண்ணன் குழந்தையாகத் தவழ்வதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். இதே பாடலை, பித்துக்குளி முருகதாசும் அருமையாகப் பாடுவார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் மற்றொரு பாடல் ‘அலைபாயுதே கண்ணா..’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எளிய ரசிகர்களிடமும் சென்று சேர்ந்தது. ஆனாலும் சங்கீத மேடைகளில் கிருஷ்ணனின் இடத்தைப் பிடிக்க கண்ணன் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

சபாக்களில் தமிழ்ப் பாடல்கள் இல்லை என்பதற்காகவே பல கீர்த்தனைகளைத் தமிழில் இயற்றியவர் பாபநாசம் சிவன். ‘உன்னைத் துதிக்க அருள் தா’ என்று திருவாரூர் திருத்தலத்தல் உள்ள சிவனைப் பற்றிய பாபநாசம் சிவனின் முதல் பாடல் தொடங்கி அவரது பல பாடல்களும் இனிமையானவை. ஆனாலும் இந்தப் பாடல்களுக்கு சபாக்களில் உரிய நேரம் கிடைக்காது.

சிகரெட் வாங்கியபிறகு சில்லரை இல்லை என்று ‘ஹால்ஸ்’ தருவது போல, அடுத்த வித்வான் மேடையேற இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது என்றால், துக்கடாவாக இத்தகைய தமிழ்ப்பாட்டுகள் பாட அனுமதிக்கப்படும்.

சபாக்களில் தமிழில் கச்சேரி நடத்த வேண்டும் என்ற உள்கலகத்தை உருவாக்கியதில் ராஜாஜி-கல்கி கூட்டணிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த அணியில் மீ.ப.சோமு, சதாசிவம் அய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தனர். ‘குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலை ராஜாஜி எழுதினார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடினார். ஆனால், அதுவும் துக்கடா நேரத்தில்தான் பாடப்பட்டது.

மேடைகளில் தமிழ் பக்திப் பாடல்களை கே.பி.சுந்தராம்பாள் முதல் மதுரை சோமு வரை பல பிரபலங்கள் பாடியிருக்கிறார்கள். ‘தனித்திருந்து வாழும் மெய்த் தவமணியே.. தண்டபாணித் தெய்வமே’ என்று முருகக் கடவுளைப் பற்றி சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய பாடலை கே.பி.சுந்தராம்பாளின் தனித்துவமான கணீர்க் குரல் அதி உயரத்துக்குக் கொண்டு செல்லும். “வெண்ணீறு அணிந்தது என்ன..என்ன….. வேலைப் பிடித்தது என்ன..என்ன…” என்கிற இடத்தில் தமிழ் இசையை சாறுபிழிந்து தேன் கலந்து கொடுத்திருப்பார். முருகனை நோக்கி மதுரை சோமு நெஞ்சுருகிப் பாடும் ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ என்ற பாட்டு மெய்சிலிர்க்க வைக்கும். ஆனால், சபாக்களின் ராக இலக்கணங்கள் வேறுவகையாக இருந்ததால், தெலுங்கு-சமஸ்கிருத-கன்னட கீர்த்தனைகளே முன்னிலைப் பெற்றிருந்தன.

‘என்தரோ மகானுபாவலு.. அன்தரிகீ வந்தனமுலு’ என்ற தியாகய்யரின் புகழ் பெற்ற கீர்த்தனை திருவையாறு ஆராதனை விழாவிலிருந்து பல சங்கீத மேடைகள் வரை பாடப்படுவது வழக்கம். இசையில் வல்லமை கொண்ட சக கலைஞர்களைப் போற்றி தியாகய்யர் பாடிய கீர்த்தனை அது. அதை ஒவ்வொரு சீசனிலும் பாடியபடியே, சில கலைஞர்களை மட்டுமே முன்னிறுத்தி வந்தன சபாக்கள்.

தமிழும் தமிழில் பாடிய கலைஞர்களும் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான், சங்கீத சபாக்களுக்கு மாற்றாக இசை மன்றங்கள் வளர்ந்தன. அதில் தமிழ்ப் பாடல்கள் மலர்ந்தன. மறுமலர்ச்சி மணக்கத் தொடங்கியது.