• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

100 முன்னோடி உழவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, ” மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் 1 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் சுமார் ரூ.40 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு ‘எண்ணெய் வித்துகள் இயக்கம்’, 2.16 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ.108.06 கோடி மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 38600 மாணவர்கள் உயிர்மெய் வேளாண் பண்ணைகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நெல் உற்பத்தித் திறனில் அதிக சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாகச் சென்று கண்டுணர்ந்து, அத்தகைய தொழில்நுட்பங்களைத் தங்கள் வயல்களில் செயல்படுத்திடும் விதமாக, 100 முன்னோடி உழவர்கள் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குக் கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்; இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்

ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களுக்கு நடைமுறையில் உள்ள 40 முதல் 50% மானியத்திற்குப் பதிலாக 60 முதல் 70% மானியம் வழங்கப்படும்; இதற்காக ரூ.21 கோடி நிதி மாநில நிதி ஒதுக்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், விபத்தினால் ஏற்படும் உடல், உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்திற்கான நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500-லிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.