குழந்தைகளைப் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் ஆகியவை இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, நான்காவது ஆண்டாக ‘கிட்-அ-தான்’ (KID-A-THON) எனும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்தின. இதில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,350-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வை, ரோட்டரி மாவட்ட ஆளுநர் Rtn. ஆர்.எஸ். மாருதி மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸின் உறுப்பினர் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் சூர்வஜித் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், இதயங்கள் அறக்கட்டளையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி முழுவதும் இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார்.
மேலும், ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ், இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து இதுவரை சுமார் 3,500 குழந்தைகள் பயன்பெறும் வகையில், ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு உதவித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இன்சுலின் மருந்துகளை உரிய வெப்பநிலையில் பாதுகாப்பதற்கான குளிர்சாதனப் பெட்டிகள், வலியில்லாமல் இன்சுலின் செலுத்த உதவும் பம்புகள், அவசர ஊர்தி சேவை, மருந்துகள் மற்றும் இன்சுலின் ஊசிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில், நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினமாகவும், இந்தியாவில் குழந்தைகள் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் தவறான செயல்பாட்டின் காரணமாக, கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் தாக்கப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. இதனால் உடலில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றார்.