புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மகளிர் கல்லூரி ஆனது பின்னாளில்
கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரியில் 29ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக, தேர்வு நெறியாளர் பொறுப்பு, முனைவர் பா. ஜெயபிரகாஷ் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை மற்றும் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் . மேலும் தனது சிறப்புரையில் கல்லூரியின் தொன்மை மற்றும் பழமை பற்றியும் மகளிர் மேம்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்ட தனித்துவம் மிகுந்த கல்லூரி என்றும் எடுத்துரைத்தார். ஒரு மாணவன் பட்டம் பெற்றால் அவனுக்கு மட்டுமே பயன்படும்,

ஆனால் ஒரு மாணவி பட்டம் பெற்றால் ஒரு குடும்பத்திற்கும் அவளைச் சார்ந்த சமூகத்திற்கும் பெயரும் புகழும் வாங்கித் தரும் என்று குறிப்பிட்டார். இங்கு பட்டம் பெறும் ஒவ்வொரு மாணவிகளின் பெருமையும் புகழும் பெற்றோர்களுக்கே சேரும் என்றும் பட்டம் பெறும் அனைத்து மாணவிகளும் உயர்நிலையை அடைய வேண்டும் என்று தனது சிறப்புரையில் வாழ்த்தினார். இங்கு இளங்கலை பட்டப் பிரிவில் 1297 மாணவிகளும் முதுகலை பட்டப் பிரிவில் 317 மாணவிகளும் பட்டம் பெற்றனர். இதில் அனைத்துத் துறைத் தலைவர்களும் பங்கேற்றனர்.

கல்லூரியின் தேர்வு நெறியாளர், பேராசிரியர் ஞானஜோதி மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.நிர்மலா ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது மாணவியரின் பெற்றோரும் ஏராளமானோர் வந்திருந்தனர்.



