• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆணவப்படுகொலைக்கு 18 வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியில் உள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மற்றோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு, இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. கண்ணகியையும், முருகேசனையும் அடித்து உதைத்து 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி குப்பநத்தம் கிராமத்து மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை செலுத்தினர். அங்கிருந்த ஊர்மக்கள் யாரும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை. சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த இருவரது சடலத்தையும் தனித்தனியாக எரித்துவிட்டனர்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, அது தற்கொலை என்று கூறி அந்தப் புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்த சில நாள்களில், ஊடகங்களில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. பின்னர் 18 நாள்கள் கழித்து புகாரை வாங்கினர் விருதாச்சலம் போலீஸார். ஆனால், `சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் களமிறங்கியதால் 2004-ம் ஆண்டு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு. வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதே ஆண்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, விருதாச்சலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்திருக்கிறது கடலூர் சிறப்பு நீதிமன்றம். அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருதாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று கூறியுள்ள நீதிமன்றம், அதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கியுள்ளது.