விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி, புல்ல கவுண்டன்பட்டி, கொம்மங்கிபுரம், டி.கான்சாபுரம், பூசாரிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

குறைந்த செலவில் அதிக லாபத்தை தருவதால் இப்பகுதியில் தொடர்ந்து மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பயிரிடப்பட்ட மூன்று மாதத்தில் இருந்து மல்லிகை பூக்கள் தொடர்ந்து பலன் தருகிறது. மேலும் 8 ஆண்டுகள் வரை செடிகளில் மல்லிகை பூக்களை பறிக்க முடியும். கிணற்றுப் பாசனத்தில் தொடர்ந்து அதிக மகசூலை தந்து வருகின்றன. .மேலும் முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மல்லிகை பூக்கள் விலை மிகவும் மலிவாக அதாவது பத்து ரூபாய்க்கு விற்பனையானது. விவசாயிகள் நஷ்டம் அடைந்து நிலையில். மாசி மாத தொடங்கிய நிலையிலிருந்து தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது மல்லிகை கிலோ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதால் எதிர்பார்த்த லாபத்தை தருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கணஞ்சாம்பட்டி விவசாயி ராஜா கூறியது மல்லிகை பூக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ரூபாய் 10 க்கு விற்பனையானது. இதனால் நஷ்டம் அடைந்து இருந்தோம். ஆனால் மாசி மாசம் குலதெய்வ வழிபாடு உள்பட சுப முகூர்த்த நாட்கள் அதிகம் வருவதால் மல்லிகை பூக்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை ஆவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என கூறினார்.







