தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஆரோக்கியராஜ், குமரேசன், ரமேஷ் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மகளிர் அணி அமைப்பாளர் கேத்ரின் கண்ணிகா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட இணை செயலாளர் சேக் அப்துல்லா, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட நிர்வாகி முகமது அப்துல்லா ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர். மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முத்துப்பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.