• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐ.டி.ரெய்டு..,

Byவிஷா

Apr 24, 2023

சென்னையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது, தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம், தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது. பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய, அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.
முதல்வரின் உறவினர்கள் பலரும் இந்த அமைப்புகளில் வந்துவிட்டார்கள். ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என திமுக அரசு தெரிவித்திருந்தது. எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் நிலை இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் சென்னை அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களுரு, மைசூரு, பெல்லாரி, தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் அரசியல் கட்சிகள் தொடர்பு இருக்கிறதா என்றும், கறுப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை சம்பவம் திமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.