• Sun. May 5th, 2024

ஈஷாவின் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்…

ByKalamegam Viswanathan

Aug 21, 2023

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஆனைமலையில் நேற்று (ஆக.20) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வேட்டைக்காரன்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஆக.20) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தொழுநோய், கண், எழும்பு, தோல், பல் மற்றும் முக சீரமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும், சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

கண் புரை பாதிப்பு கண்டறியப்பட்ட நோயாளிகள் கண்புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தவிர, மகளிருக்கான கர்ப்ப பை பரிசோதனை, காது கேட்கும் திறன் பரிசோதனை, ஹீமோகுளோபின், சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. மேலும், அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாமை சோமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,
கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவமனை, பொள்ளாச்சி கே.எம். மருத்துவமனை, சோழா குழுமம் ஆகியோருடன் இணைந்து ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு நடத்தியது.

இதேபோல், கோவை ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கல்லீரல், சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள், நீரிழிவு நோய், இரத்த சோகை, தைராய்டு, வைட்டமின் டி அளவு போன்ற முக்கிய பரிசோதனைகள் மிக குறைந்த விலையில் செய்து கொடுக்கப்பட்டது. பல்வேறு விதமான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்கு இப்பரிசோதனைகள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த முகாமிலும் ஏராளமான மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *