• Sat. May 4th, 2024

பரவும் ஜே.என் 1 கொரோனா தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்

Byவிஷா

Dec 25, 2023

உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிய கொரோனா வைரஸின் புதிய துணை மாறுபாடு ஜே.என் 1 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜே.என் 1 கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கேரளாவில் முதலில் பரவிய பிறகு, கோவா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனிடையே, மாநில அரசுகள் உஷாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஜே.என் 1 கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் “ஜே.என் 1 கொரோனாவிற்கு தடுப்பூசி தேவை இல்லை எனவும்,பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை முன்னெச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே மாநிலங்களுக்கு பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
ஓமிக்ரானின் இந்த புதிய துணை மாறுபாட்டின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் நிம்மதியான விஷயம். ஜே.என் 1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும். இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கைபடி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 656 பேர் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிக்சை பெறறு வருபவர்களின் எண்ணிக்கையை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 5,33,333 ஆக உள்ளது என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *