• Mon. Jan 20th, 2025

வாக்களித்தால் தேர்வு எழுத தடையா? : என்டிஏ விளக்கம்

Byவிஷா

Apr 10, 2024

தேர்தல்களில் வாக்களிக்கும் போது விரலில் வைக்கப்படும் மையால் தேர்வு எழுத தடை என்கிற தகவல் உண்மையல்ல என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, தேர்தலில் வாக்களிக்கும் நபர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். அவ்வாறு விரலில் மை வைத்து தேர்வு எழுத வருபவர்கள், தேர்வு மையங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து என்டிஏ தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘என்டிஏ அமைப்பால் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க வருபவர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களித்து விரலில் மை வைத்திருந்தால் தேர்வு மையத்துக்குள் நுழையதடை விதிக்கப்படும் என சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவிவருவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றன. இந்த செய்திகள் முழுவதும் ஆதாரமற்றவை. இத்தகைய வழிகாட்டுதல்கள் எதையும் என்டிஏ வெளியிடவில்லை. வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்.
தேர்வர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தலாம். வாக்களிப்பது அவர்களின் தேர்வுக்கான தகுதியை எந்தவிதத்திலும் பாதிக் காது. மேலும், தேர்வர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வரவுள்ள தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.