• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயரப்போகிறதா?… பகீர் கிளப்பும் ராமதாஸ்!…

By

Aug 19, 2021

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்றும் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதித்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நிலைமையை சமாளிக்க மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இவை உடனடியாக உயர்த்தப்படாவிட்டாலும், அடுத்த சிறிது காலத்தில் கண்டிப்பாக கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 9ஆம் தேதி வெளியிடப்பட்ட போதே, மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்படும் என்ற அச்சம் எழுந்திருந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் நிதித்துறை செயலாளரின் கருத்து அமைந்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014 & 15 ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பை சந்தித்தது. 2014ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015 & 16ஆம் ஆண்டில் ரூ.5750 கோடியாகவும், 2016 & 17 ஆம் ஆண்டில் ரூ.4350 கோடியாகவும் குறைந்தது.

ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும் தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் இழப்புக்கும் இதே காரணங்கள் முழுமையாக பொருந்தும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு இருந்த போது வெளிச்சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது சரியாக இருக்கலாம்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்த மின்சார உற்பத்தியை அதிகரித்து, மின்சாரத்தின் உற்பத்திச் செலவை கணிசமாகக் குறைப்பதன் மூலம் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை இலாபத்தில் இயக்க முடியும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார உற்பத்தி எந்த காலகட்டத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக அதிகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை 4320 மெகாவாட் மட்டுமே அனல் மின்சார உற்பத்தித் திறன் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.