மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்குப்பொய்கைநல்லூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் வேலை செய்யாத பயனாளிகள் பெயரில் வேலை செய்ததாக ஊதியம் பெறப்பட்டு அந்த ஊதியத்தை ஊராட்சி செயலர் அன்புராஜ் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், துணை ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் உட்பட விசாரணை குழு, ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய அன்புராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ரூ.52,500 வரை கணக்கில்லாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி செயலர் அன்புராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.