• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஐபிஎல் தொடர்: போட்டிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 8 அணிகளோடு விளையாடப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டன. இதனால் 2022 ஐபிஎல் சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டு மற்றும் 2027ம் ஆண்டு காலகட்டத்திற்கான ஐந்தாண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிசிசிஐ-க்கு ரூ.48 ஆயிரத்து 390 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் இப்போது ஐபிஎல் தொடர் உலகின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக் தொடராக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஐபிஎல் நிர்வாகத்தின் புதிய தலைவர் அருண் சிங் துமால் கூறுகையில், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கவுன்சில் இணைந்து ஐபிஎல் தொடரை உலகின் நம்பர் 1 விளையாட்டு லீக்காக மாறுவதை உறுதி செய்யும். அந்த வகையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 74 போட்டிகளாகவும், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 84 போட்டிகளாகவும், 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு 94 போட்டிகளாகவும் அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆனால் அணிகளின் எண்ணிக்கை 10 இல் மட்டுமே இருக்கும். அதை அதிகப்படுத்தினால், ஒரே நேரத்தில் போட்டியை நடத்துவது கடினமாகிவிடும் என்றார்.