• Sun. Sep 24th, 2023

ஆபாசமாக ஆடியோ, வீடியோ பதிவு செய்து மிரட்டல்- கண்ணீரில் பெண்

திமுக நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களை பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க வாக்குமூலம்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சி தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் நகராட்சியாக மாற்றியது. இளம்பிள்ளை என்றாலே பட்டுத்தறி ஜவுளி உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர்கள், அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளராக உள்ள செல்வம் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக தான் அடையாளம் தெரிவிக்கும் 6 பேரிடம் ஆபாசமாக பேசி கால்ரெக்கார்டிங் செய்து தரும்படியும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட அந்த பெண் 6 பேரிடம் ஆபாசமாக பேசி மயக்கியதில் 3 பேர் இந்த பெண்ணின் வலையில் மயங்கினர்.

அந்த பெண்ணின் வீட்டிற்கு வருவதாகவும், அங்கு தனிமையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய செல்வம் கலைசெல்வியின் வீட்டில் ரகசிய கேமராவை வைத்துள்ளார். அடுத்தடுத்த நாள் ஒவ்வொருவராக அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் அவர்களின் நடவடிக்கைகளை வீடியோ பதிவுசெய்து அந்த வீடியோ காட்சிகளை செல்வத்திடம் கொடுத்துள்ளார் அந்த பெண்.

பின்னர் அந்த வீடியோ மற்றும் அவர்கள் கலைச்செல்வியிடம் பேசிய ஆடியோ ஆகியவற்றை அவர்களிடம் காட்டி மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை தன்னிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக 3 பேர் மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வைத்துள்ளார்.

தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 3 பேரும் அந்த பெண் பேசிய ஆடியோவை ஆதாரமாக கொண்டு மறைமுகமாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளனர். ஒரு கட்டமாக அனைவரும் வெளியே தெரிந்தால் கேவலம் என நினைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தையும் மூடிமறைத்து விட்டனர்.

இதனிடையே செல்வத்தின் வலதுகரமாக இருந்த அவரது நண்பர் ரூபக் என்பவர் அந்த பெண்ணிடம் பேசிய ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ஆதாரங்களை வைத்து தனக்கும் பறிக்கப்பட்ட பணத்தில் பங்கு கேட்டுள்ளார். இதனிடையே செல்வத்தின் தம்பியை ரூபக் அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் ரூபக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ரூபக் மீது கலைச்செல்வி மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்த லீலைகளின் ஆடியோ, வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே செல்வம் இடங்கணசாலை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு சேர்மேன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சிக்க விட்டு தொழிலதிபர்களிடம் தேர்தல் செலவிற்காக பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த பிரச்சனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் செல்வம் சொல்லிதான் இவை அனைத்தையும் செய்தேன் என கலைச்செல்வி வாக்குமூலமாக கூறும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் நாகேந்திரன், ராமச்சந்திரன்,ரவி ஆகியோரை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், மேலும் சிலர் இன்னமும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதேபோல், தன்னை காரில் கடத்தி சென்று இவ்வாறு பேச சொல்லி மிரட்டியதாக ஒரு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து உண்மை தன்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவுள்ளது.

அடையாளம் தெரியாத ஒரு பெண் ஆபாசமாக பேசும்போது அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று வீடியோ பதிவில் சிக்கிக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் முக்கிய பிரமுகர்களின் இந்த நிலை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *