கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்..,

துணை குடியரசுத் தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் வருகின்ற ஐந்தாம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார் என்றும், நான்காம் தேதி சென்னைக்கு வர உள்ளதாகவும், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய உள்ளதாக கூறினார்.
ஜிஎஸ்டி குறித்து தொழில் அமைப்பினரை சந்தித்து அது தொடர்பாக அவர்கள் கோரிக்கையை பெற்று பிரச்சினைகளை தெரிந்து கொண்டு மத்திய அரசாங்கத்திடம் இது பற்றி தெரிவிக்க உள்ளதாக கூறினார்.
வட மாநில தொழிலாளர்களைப் பற்றி தொழில்துறை அமைச்சர் பேசியது கண்டனத்திற்குரியது என்றும், அமைச்சர் டிஆர்பி ராஜா உட்பட திமுக மூத்த தலைவர்கள் வட இந்திய தொழிலாளர்களை பற்றி அவதூறாக அவமரியாதையாக பேசி வருவது என்பது முதல் முறை அல்ல என்றும், வட இந்தியா பெண்களை பற்றி அமைச்சர் பேசும்பொழுது ஒன்று புரிந்து கொண்டு இருக்க வேண்டும். வேத காலத்தில் இருந்து பெண்களுக்கென்று தனி சிறப்பான இடம் இந்தியாவில் உள்ளது என்றும், இந்திய சுதந்திரம் மறுமலர்ச்சி ஆகியவற்றில் வட இந்திய பெண்களும் பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.
வட இந்தியாவில் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை பின்தங்கி உள்ளது என்றால் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும், நீண்ட காலம் ஆட்சியில் இருந்தது கல்வி ஆகியவற்றிற்கு அடித்தளம் இடுவதற்கு தவறியது காங்கிரஸ் கட்சி தான் என குற்றம் சாட்டினார்.
கடந்த 11 வருடங்களாக முக்கியமான திட்டங்களான கழிப்பிட வசதி, வீடு அனைவருக்கும் வங்கி கணக்கு தொழில் துவங்குவதற்கு பெண்களுக்கான சிறப்பு திட்டம் என்று இந்திய பெண்கள் அடுத்த தளத்திற்கு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் பொழுதும் அரசியலுக்காக வடக்கு, தெற்கு என்று அவமானப்படுத்த வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கை என்றார்.
சாலை விபத்துகளில் அதிகமாக உயிரிழக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிவித்தார். முதலமைச்சர் துவக்கி வைக்கின்ற திட்டங்களுக்கும் மக்களிடம் அந்த திட்டம் சென்று சேர்வதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளது என்றும், மேடையில் கேமரா முன்பு திட்டங்களை அறிவிக்கும் பொழுது நன்றாக தான் உள்ளது. ஆனால் மேடைக்குப் பின்பு நடப்பது சம்பந்தமில்லாமல் இருக்கிறது என விமர்சித்தார்.

கல்விக்காக திமுகவினர் விழா நடத்தியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்.., அது டிராமா அரசாங்கத்தின் இன்னொரு நடவடிக்கை என்றும் என்றும் எத்தனை அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஒரு சாதனை என விமர்சித்தார். இன்றைக்கு பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளில்லை, ஆசிரியர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் பாடம் நடத்துவது, ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், ஜாதி ரீதியான மோதல்கள் இதையும் அவர்கள் சேர்த்துக் கொள்வார்களா என கேள்வி எழுப்பினார். துறைக்கு சம்பந்தமே இல்லாத சினிமாக்காரர்களை வைத்து விளம்பரத்திற்காக இந்த நாடகத்தை நடத்தி வருவதாகவும் சினிமாக்காரர்களை குறைவாக நான் கூறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தனியார் காப்பகத்தில் குழந்தையை தாக்கிய விவகாரம் தொடர்பான கேள்விக்கு, சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார். இது போன்ற காப்பகங்களில் முறையாக சூப்பர்வைஸ் செய்யவில்லை என்றால் இது போன்ற தவறுகள் நேரிடும் என தெரிவித்தார்.
விஜய் ஒருபுறம் அரசியல் செய்யும் பொழுது, மறுபுறம் திமுகவினர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பேச வைத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவிற்கு இது ஒன்றும் புதிது அல்ல அரசியல் கட்சிகளுக்கு எதிராக சினிமாக்காரர்களை வைத்து பேச வைப்பார்கள். துறைக்கே சம்பந்தமில்லாத ஆட்களை பிரபலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். திராவிட மாடல் என்றாலே டிராமா அரசுதான் என விமர்சித்தார்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் இளம்பெண்ணின் ஆடை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் உடை என்பது தனிப்பட்டது தான் என்றும், அதே சமயம் அவர்கள் அது போன்று நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், பூ வாங்க வந்த பெண்களிடம் உடையை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் பொதுவெளி என்று வரும் பொழுது ஆடைக்கு என்று கண்ணியம் உள்ளது என கூறினார்.
