
பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்த கருத்தை ட்விட்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கோலாப்பூர் இடைத்தேர்தலில் சத்யஜித் கடமின் வேட்புமனுவை பாஜக தேசிய தலைமைக்கு அனுப்பி பரிந்துரை செய்திருக்கிறோம். மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவின் மனைவி இந்த தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தால் அவருக்கும் வேட்பு மனு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் நாம் வகுத்துள்ள பல திட்டங்களை செய்து முடிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கட்டாயம் தேவை. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நீங்கள் முழு ஈடுபட்டை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 60 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவி இருக்கிறார். இது இவ்வுலத்திற்கு எவ்வளவு பயனுள்ள செயல் என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவில் இதற்கு முன் 2 முறை இந்துக்கள் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. முதல்முறை பிரித்விராஜ் சவுகான் காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் இருந்தது. 2 வது முறை சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் ஆதிக்கம் ஓங்கியது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நான் சத்ரபதி சிவாஜியுடன் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.
பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க தூங்காமல் இருப்பதற்கு பல்வேறு வித்தைகளை கற்று வருகிறார். தற்போது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் தூங்கும் அவர், இனி 24 மணி நேரமும் தூங்காமல் இருப்பார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்.” என்றார்.
இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், “தயவுசெய்து சற்று புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ளுங்கள். தூங்க முடியாமல் இருப்பது இன்சோம்னியா எனப்படும் நோய். அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதுகுறித்து பெருமை பேசாதீர்கள். தயவு செய்து உங்கள் தலைவரின் நலனில் அக்கறை செலுத்துங்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.