• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில் மை குப்பிகள்

Byவிஷா

Mar 9, 2024

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரூ.55 கோடி செலவில், சுமார் 26.55 லட்சம் அழியாத மை குப்பிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி மார்ச் 15ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல்களில் அழியாத மை முக்கிய பங்கு வகிக்கிறது. விடுதலை கிடைத்த பின்னர், நடைபெற்ற முதல் தேர்தலில் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களிடமும் அடையாள அட்டை இல்லாததால் வாக்கு செலுத்துவதில் பல முறைகேடுகள் அரங்கேறின. இதனைக் களையும் வகையில் தான் வாக்கு செலுத்தியவர்கள் விரலில் அழிக்க முடியாத மை வைக்கப்பட்டது.
இப்போது வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் கூட நடைமுறையை மாற்றாமலும், கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் இந்த மை பூசப்படுகிறது. வாக்களிக்கச் செல்லும்போது இடது கையின் ஆள்காட்டி விரலில் வாக்குப்பதிவு மையத்தில் இருக்கும் அதிகாரி அழியா மையை பூசிவிடுவார். இடது கையின் ஆள்காட்டி விரல் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அந்த விரலே இல்லையென்றாலோ தான் வேறு ஏதாவது விரலில் அந்த மையை வைக்க முடியும்.
2006க்கு முன்பு வரை, இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் தான் மை வைக்கப்பட்டது. 2006லிருந்து கோடு போல் நகத்திலிருந்து விரல் வரை நீட்டி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தேர்தலுக்கான அழியாத மை தயாரிக்கும் பணிகள் 1962ம் ஆண்டில் மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அன்று முதல் தற்போது வரை அதே நிறுவனத்திடம் மட்டுமே மை தயாரிக்கும் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மை இந்த நிறுவனத்திடமிருந்து தான் தேர்தல் நேரத்தில் மை விநியோகம் செய்யப்படுகிறது.
அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான அழியாத மை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரூ55 கோடியில் சுமார் 26.55 லட்சம் குப்பிகள் தயாரித்து தர தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. மை தயாரிக்கும் பணிகள் 70 சதவீதம் முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள குப்பிகள் மார்ச் 15 ம் தேதிக்குள் தயாராகி விடும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு 10 மி.கி அழியாத மை குப்பியிலிருந்து சுமார் 700 வாக்காளர்களின் கைகளில் மை வைக்கலாம். கடந்த தேர்தலில் ஒரு குப்பியின் விலை ரூ160 ஆக இருந்த நிலையில் இந்த தேர்தலில் ரூ14 அதிகரித்து ஒரு குப்பியின் விலை ரூ.174 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு வைக்கப்படும் மையானது சில்வர் நைட்ரேட் ரசாயனம் மூலம் தயாரிக்கப்படுவதால் மை தோலின் செல்களில் கலந்து விடுகிறது. கையில் புற ஊதா வெளிச்சம் பட்டால் அதன் அடர்த்தி 25 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தான் மையை உடனடியாக அழிக்க முடியவில்லை. குறைந்தது 3 முதல் 4 நாட்கள் வரை அடர்த்தியான ஊதா நிறத்தில் காணப்படும். இந்த மை முழுவதுமாக அழிய சுமார் 20 நாட்கள் வரை ஆகலாம். மை வைத்த இடத்தில் புதிய செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியான பிறகு தான் மை முற்றிலுமாக மறைகிறது.