

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கண்ணாடி பங்களா அருகே ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை காலில் அடிபட்ட நிலையில் உணவு தேடுவதில் சிரமப்பட்டு வந்தது.
வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் செல்லும் பொழுது காட்டுயானை நடக்க முடியாமல் இருப்பது கண்டு வனச்சரகர் காசிலிங்கத்திற்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை கள இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி வனச்சரகர் காசிலிங்கம், கால்நடை மருத்துவர் சுகுமார், ராஜேஷ்குமார் என 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இந்த யானை வந்துள்ளது. தனது தாயுடன் காட்டுயானை இருக்கும்பொழுது ஆண் காட்டு யானை இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கும் பொழுது தந்தத்தால் காலில் குத்தி உள்ளது. மேலும் கண்ணாடி பங்களா வனப்பகுதியில் இருந்து கும்கி யானைகள் கலீம், சஞ்சீவ், அபிநயா, செல்வி உதவியுடன் மயக்க மருந்து செலுத்தாமல் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையை சிகிச்சையின்போது பார்த்துக்கொள்ள பாகன் விரைவில் நியமிக்கப்பட உள்ளது, காயம் முழுமையாக குணமானவுடன் அடைந்தவுடன் வனப்பகுதியில் மீண்டும் விட வனத்துறை உயர் அதிகாரிகளின் முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தனர்.



