இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன்பு வல்லரசாக மாறும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கையுடன் பேசினார்.
கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் ரோகிணி பொறியியல் கல்லூரியின் -வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அங்கு பயின்ற 400 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை அளித்து பேசினார்.

பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கு ராக்கெட் தேவை. இந்த ராக்கெட்டை அனுப்புவதற்கு தற்போது இரண்டு தளங்கள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு ராக்கெட் தளங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அதில் ஒன்று ஸ்ரீஹரிகோட்டாவிலும் மற்றொன்று தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குலசேகரப்பட்டணத்தில் அமைப்பதற்குரிய ராக்கெட் ஏவுதளத்தின் பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அண்மையில் பாரத பிரதமர் மோடி இந்த பணியினை துவக்கி வைத்தார். இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகர பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவுவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடையும்.
இஸ்ரோவை பொறுத்த வரையில் பெண்களுடைய பங்கு மிக அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம்முடைய நாடு ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்றால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். இஸ்ரோவை பொருத்தவரையில் நாங்கள் திறமையின் அடிப்படையில் எங்கள் பொறியாளர்களை தேர்வு செய்கிறோம். சந்திரயான் 2 உடைய திட்ட இயக்குனர் வனிதா என்கிற ஒரு பெண் பொறியாளர்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக உலகிலேயே நான்காவது நாடாக நமது இந்தியா ஒரு செயற்கைக்கோளை அனுப்பியது அந்த செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் நிஹார் ஷாஜி என்பவர். ஒரு பெண். 2023 ஆகஸ்ட் 23இல் சந்திரயான் ஸ்ரீ என்ற செயற்கைக்கோள் நிலாவில் தென் துருவத்தில் இறங்கி இந்தியா முதல் நாடு என்ற ஒரு பெருமையை பெற்றது. அந்த முக்கியமான தருணத்தில் நாங்கள் எல்லாம் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் போது அங்கே பணிபுரிந்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள் பெண்களாக இருந்தனர்.
ஐ எஸ் ஆர் ஓ என்பது இந்திய நாட்டின் ஒரு முக்கியமான துறை. பாரத பிரதமர் மோடி ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த என்னை ஒரு இந்த அளவிற்கு உயர்த்தி ஒரு முக்கியமான பொறுப்பை அளித்துள்ளார்.

சந்திரன் 4, சந்திரன்3 என்பது நிலாவில் போய் இறங்கி அங்கு இருக்கின்ற நிலைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. சந்திரன் 4 என்பது இந்த ராக்கெட் போய் அங்கிருந்து கனிம வளங்களை எடுத்து பூமிக்கு கொண்டு வரக்கூடிய ஒரு திட்டம் ஆகும். சந்திரயான் 3 எடை என்பது நான்காயிரம் கிலோ. சந்திரயான் 4 உடைய எடை ஏறத்தாழ 9200 கிலோவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை இரண்டு ராக்கெட்டுகள் மூலம் கொண்டு போய் நிலை நிறுத்தி அங்கிருந்து சாம்பிள்கள் எடுத்து கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 2028 ஆம் ஆண்டில் நடைபெறும். அதற்கான எல்லா விதமான ஆய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
1962 ஆம் ஆண்டு நாம் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கும்போது மற்ற நாடுகளை சார்ந்து இருந்தோம். இப்போது வளர்ச்சி அடைந்து முதல் இடத்தை அடைந்துள்ளோம். விண்வெளி ஆய்வு மற்றும் திட்டங்களை பொறுத்தவரை ஏராளமான நிதி ஆதாரம் தேவைப்படும். இதன் காரணமாக சில திட்டங்களில் மற்ற நாடுகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய நிலை உள்ளது.
நம்முடைய நோக்கம் விண்வெளித் துறை ஆராய்ச்சி மூலம் எளிய மக்களுக்கும் எல்லாவித நன்மைகளும் கிடைக்க வேண்டும். அதுவும் குறைந்த செலவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்
நாசா இஸ்ரோ இணைந்து ஒரு செயற்கைக்கோள் அனுப்ப திட்டம் உள்ளது. இந்த செயற்கைக்கோளின் பெரும்பாலான பகுதி இஸ்ரோ தயார் செய்துள்ளது. சில பகுதிகளை அமெரிக்கா தயார் செய்துள்ளது. இவற்றை இணைத்து பெங்களூரில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்படும். எனவே நாம் நாமும் மற்ற நாடுகளைப் போல அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று உள்ளோம். எனவே சில இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பு என்பது அவசியம். ஜி 20 நாடுகளுக்காக ஒரு செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். இதற்கான 40% பணிகளை இந்தியா செய்கிறது.
அதாவது இதனுடைய மேஜர் பார்ட்னராக இந்தியா உள்ளது.
முதன் முதலாக 1975 இல் இந்தியா செயற்கை கோளை அனுப்பியது. அப்போது வளர்ந்த நாடுகளை பின்பற்றி அந்நாடுகளின் உதவி அடிப்படையில் நாம் செயற்கை கோளை அனுப்ப வேண்டி இருந்தது.

ஆனால் இன்று வரை 34 நாடுகளுக்காக 433 சேயற்கை கோள்கள் இந்தியா இந்திய மண்ணில் இருந்து இந்திய ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி உள்ளோம். 139 செயற்கை கோள்கள் பூமியை ஆய்வு செய்வதற்கும் பருவநிலை குறித்து ஆய்வு செய்வதற்கும் வேறு பல ஆராய்ச்சிகளுக்காகவும் அனுப்பி உள்ளோம். அதில் 90 சதவீதம் கடந்த பத்து ஆண்டுகளில் அனுப்பி உள்ளோம். அந்த வகையில் இந்தியா செயற்கைக்கோள் அனுப்புவதில் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்கிறது.
மீனவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சாதனம் மூலம் அவர்கள் சொந்த மொழியில் தாங்கள் எங்கே மீன் பிடித்துக் கொண்டிருக்கிறோம், சர்வதேச எல்லை எங்கே உள்ளது?, எதை நாம் தாண்டக்கூடாது, எந்த இடத்தில் மீன் கிடைக்கும் போன்ற அனைத்து தகவல்களையும் அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நாம் உள்ளங்கையில் வழங்கி உள்ளோம்.
தமிழ்நாடு மீனவர்கள், குஜராத் மீனவர்களுக்கு இது போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த தொழில்நுட்ப மூலம் எங்கு அதிகமான மீன் கிடைக்கும், காலநிலை மாற்றங்கள், மழை காற்று போன்ற விபரங்கள் அனைத்தும் மீனவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தியாவைப் பொறுத்தவரை 7200 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது. மீன்பிடி தொழில் மூலம் கிடைக்கின்ற லாபம் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அரசாங்கம் இஸ்ரோவுக்கு வழங்கக்கூடிய தொகையே ஆண்டிற்கு வழங்கக்கூடிய தொகை வெறும் 15000 கோடி மட்டுமே.
ஐஎஸ்ஆர்ஓ வில் 20,000 பேர் பணிபுரிகின்றனர். இந்திய விண்வெளி துறை என்பது சாதாரண அடித்தட்டு மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் தான் முன்னுரிமை அளித்து வருகிறது.
நம்முடைய சொத்துக்களை கூட சாதாரண மக்கள் கண்காணித்துக் கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது.

நேவிகேஷன் சாட்டிலைட் அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இது அனைத்தும் சாதாரண மக்கள் பயன் பெறுவதற்காகவே. 1962 ஆம் ஆண்டு நாம் நிலாவிற்கு ராக்கெட் அனுப்புவதற்கான முயற்சி மேற்கொண்டோம். அதன் பிறகு சந்திராயன் 1,2,3 அனுப்பியுள்ளோம் எத்தனையோ நாடுகள் அனுப்பி இருந்தாலும் கூட நாம்தான் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதன்முறையாக அறிந்து வெளியிட்டோம். சந்திராயன் 3 நிலாவில் இறங்கியது உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் அங்கு நாம் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம் என்றால் அங்கே நிறைய உலோகங்கள் இருக்கிறது என்பதை கண்டு பிடித்து உள்ளோம். இரும்பு, சிலிக்கான், கார்பன், மாங்கனிஸ் உட்பட 8 விதமான உலோகங்கள் அங்கு இருக்கிறது. அது போன்று பூமியில் இருப்பதை போன்று தட்பவெட்ப நிலை மேற்பரப்பிலும் அடிபரப்பிலும் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பங்கள் சாதாரண கிராம புற மக்களுக்கும் கொண்டு சென்றடைய வேண்டும் என பாரத பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்திய விண்வெளித் துறை தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 8500 ரயில்களை நாங்கள் ஒன்று கொண்டு இணைத்துள்ளோம். அவைகளின் வருகை நாட்டில் எந்த மூலைகளிலம் இருந்தும் தெரிந்து கொள்ளும் வசதியை நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் அளித்துள்ளோம். அதுபோலவே கடலில் மீன் பிடிக்கின்ற படகுகள், சாலையில் செல்லுகின்ற வாகனங்கள் அனைத்தையுமே கண்காணிக்க கூடிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி வருகிறோம்.
இந்திய விண்வெளித் துறை என்பது சாமானிய மக்களுக்காக பல தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கு முன்பு இந்தியா நிச்சயமாக வல்லரசாக மாறும் என்று நான் நம்புகிறேன். இந்தியா சுதந்திரம் பெறும்போது 95% மக்கள் வறுமை கோட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நிலைமையில் நாம் உலக அளவில் 5-வது பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக இருந்து வருகிறோம். அதிலும் இங்கிலாந்தை தாண்டி மேம்பட்ட நாடாக வளர்ந்து இருக்கின்றோம். நமது பாரத பிரதமர் மோடியின் திட்டத்தின் படி விரைவில் நாம் 3- வது பொருளாதார நாடாக உயர்வோம். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பார்க்கும் போது நாம் இந்த இலக்கை கண்டிப்பாக அடைவோம் என்று நம்புகிறேன். கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.

பிரதமரின் தொலைநோக்கு பார்வை:
பாரதப் பிரதமர் மிகவும் இந்த நாடு வல்லரசாக மாற வேண்டும் சாதாரண குடி மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும். பிரதமர் மோடி விண்வெளிக்கும் சாதாரண மக்களுக்கும் எந்தவிதமான இடைவெளியும் இருக்கக்கூடது. என எங்களிடம் கூறியுள்ளார். நாங்களும் அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.