உலகிலத்திலேயே பால் உற்பத்தியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று பேசினார். அப்போது இந்த தகவலைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “பாஜக அரசு 2014-ம் ஆண்டு ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தை தொடங்கியதிலிருந்து, நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை 15 சதவீதம் அதிகரிக்கும். உலகில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய 239 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர், அதில் 75 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு 471 கிராம் ஆகும். ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களைப் பராமரித்து மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன் மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.