காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் கனமழையால், ஒகேனக்கல் அருவிகளில் நீர் வரத்து வினாடிக்கு 1800 அடியாக அதிகரித்துள்ளது.
பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததாலும், தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள பிலிகுண்டுலு வழியாக செல்லக்கூடிய காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்தது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து வெகுவாக சரிந்தது.
கோடை காலம் மற்றும் மழையின்மையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 200 கன அடியாக நீடித்து வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆறு பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1800 அடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்திலும் இன்னும் சில தினங்களுக்கு கோடை மழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, ஒகேனக்கல் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
