• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

Byவிஷா

Apr 25, 2024


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 2024 – 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனி நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும், பள்ளியின் பாடத்திட்டம் தொடங்கி தேர்வுகள், விடுமுறை விதிகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு முன்னரே அரசு பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் 5 நாட்களிலேயே எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நேற்று வரை 3,24,884 மாணவர்கள் அரசுபள்ளியில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,793 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில்1,741 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.