• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகரில் பாடகர் டிஎம்எஸ் திருவுருவச் சிலை திறப்பு..!

ByKalamegam Viswanathan

Aug 17, 2023

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன், நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன், திருவுருவச் சிலையை நேற்று (16.8.2023) திறந்து வைத்தார். தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 1923-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று 1950-ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத் திகழ்ந்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்களால் டி.எம்.எஸ். என்று அழைக்கப்பட்டு அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “ஏழிசை மன்னர்” என்ற பட்டம் டி.எம்.சௌந்தரராஜன் வழங்கப்பட்டது. மேலும், 1974-75ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடி தன் குரல் வளத்தால் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்வோடு கலந்திருந்த டி.எம். சௌந்தரராஜன் 25.5.2013 அன்று மறைந்தார்.
பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என்று 24.3.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், பெயரிடப்பட்டது. மேலும், அவர் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரியும் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அன்றையதினம் நடைபெற்றது.
2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில் மதுரை மாநகரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள
“கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன், திருவுருவச் சிலையை, தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன், திருவுருவச் சிலையினை திறந்து வைத்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர், டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பூமிநாதன், கோ. தளபதி, துணை மேயர் டி. நாகராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, டி.எம். சௌந்தரரராஜன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.