• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 18, 2022

நற்றிணைப் பாடல் 44:

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்த
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே?

பாடியவர் பெருங்கௌசிகனார்
திணை குறிஞ்சி

பொருள்:

அவள் மலைநாடன் காதல்மகள். என்னுடன் அருவியில் நீராடிவிட்டுத் திரும்புகையில் அவள் குறி காட்டிய முறுவல் பார்வை, நெஞ்சே! உனக்குத்தான் தெரியும்.
ஒப்பரிய ஆயத்தாரோடு அருவியில் விளையாடினாள். அப்போது நீரலை தாக்கி அவளது கண்கள் சிவந்தன. என்றாலும் மழையீரம் போன்ற குளிர்ந்த கண்கள் அவை. வீட்டுக்குத் திரும்பும்மோது அவள் ஒரு பார்வை பார்த்தாள். அது புன்முறுவல் பார்வை. அதில் ஒரு நோக்கம் இருந்தது. அது குறியா-நோக்கம்.

நெஞ்சே! – தலைவன் தன் நெஞ்சை அழைத்துச் சொல்கிறான். உனக்குத்தான் அந்த நோக்கத்தின் பொருள் தெரியும்.
குறவர் கோடல் என்னும் வெண்காந்தள் மலரைக் கண்ணியாகக் கட்டிச் சூடிக்கொள்வர். நீண்ட இலைகளுடன் விளைந்த தினைக்கதிர்களை அவர்கள் தம் முற்றத்தில் குவித்து வைத்திருப்பர். சுற்றத்தாருடன் ஒன்றுதிரண்டு அந்த முற்றத்தில் மகிழ்ந்து திளைத்திருப்பர். பக்கத்தில் ஆசினிப்பலா மரம் இருக்கும். அதன் கிளைகளில் மின்மினிப் பூச்சிகள் விளக்குப் போல மின்னும். குறவரின் அன்புமகள் அந்த மின்மினி வெளிச்சத்தில் மழைமேகம் நகர்வதைப் பார்த்து மகிழ்வாள்.