• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 3, 2022

நற்றிணைப் பாடல் 56:

குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும் கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
‘ஏதிலாட்டி இவள்” எனப்
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே

பாடியவர்: பெருவழுதி
திணை: பாலை

பொருள்:

குர (குரவு) என்பது குள்ளமான ஒரு செடி. அதில் நல்ல நல்ல சின்னச் சின்ன பூக்கள். அவற்றில் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால் அவற்றின் மணம் கலந்த காற்று வீசுகிறது. வண்டுகள் மொய்ப்பது கண்ணுக்கினிய காட்சி. இதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் இனிய வேளையில் என் வளையல்கள் கழல்கின்றன. இப்படிக் கழலச் செய்துவிட்டுப் பிரிந்து சென்றவரை எண்ணி என் நெஞ்சம் துன்புறுகிறது. அவரோ தான் பொருளீட்டும் செய்வினையில் அசைந்துகொடுக்காமல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். என் நெஞ்சம் அவரிடம் சென்றது. அவரையும் கூட்டிக்கொண்டு அவருடன் சேர்ந்து ஒன்றாகவே வந்துவிடலாம் என்று அங்கேயே வருந்திக்கொண்டிருக்கிறது போலும். அவரோ என் நெஞ்சுடன் திரும்புவதற்கு அருள் தரவில்லை. அதனால் என் நெஞ்சம் அழிந்து தொந்தது. இங்கே என்னிடம் வந்தது. என்னைப் பார்த்தது. என் மேனி ஏக்கத்தால் பொன்னிறம் பெற்று அழகழிந்து காணப்பட்டது. இதனைப் பார்த்த என் நெஞ்சு ’இவள் என்னுடையவள் இல்லை, வேறொருத்தி’ என்று எண்ணி வருத்தத்தோடு திரும்பிப் போய்விட்டது போலும்.