• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byதரணி

Aug 21, 2024

நற்றிணைப்பாடல்: 388

அம்ம வாழி, தோழி! – நன்னுதற்கு
யாங்கு ஆகின்றுகொல் பசப்பே – நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் கடல் மீன் தந்து, கானற் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?

பாடியவர்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் திணை: நெய்தல்

பொருள்:

தோழி வாழ்வாயாக! யான் கூறுகின்ற இதனைக் கேள்; வன்மைமிக்க புரிகளான் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற ஈட்டியையுடைய நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே செல்லுகின்ற பரதவர்; ஒள்ளிய விளக்குகளைக் கொளுத்திக் கொண்டு நடுயாமத்து வேட்டைமேற்சென்று; கடலிலே பிடித்த மீன்களை விடியற்காலையில் கொண்டுவந்து; கழிக்கரைச் சோலையின்கண்ணே குவித்து; உயர்ந்து கரிய புன்னை மரங்களின் வரியமைந்த நிழலிலிருந்து; தேன் மணம் வீசும் தௌ¤ந்த கள்ளை அருகிலே தம் உறவினருடன் கூடிப்பருகி; அளவில்லாது மிகவும் மகிழ்ந்து வைகும் கடலின் துறையையுடைய தலைமகன்; எமது சிறிய உள்ளத்தினின்று நீங்குதல் கற்றறிந்திலனாதலின் எப்பொழுதும் எம்முள்ளத்தூடே இராநின்றனன்; அங்ஙனம் அவன் எம்மைப் பிரியாது உறைதலானே எமது நல்ல நுதலின் கண்ணே பசலை எவ்வாறு உண்டாகாநிற்கும்; அதனை ஆராய்ந்து கூறிக் காண்!