• Sun. Jun 30th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jun 11, 2024

நற்றிணைப்பாடல்: 379

புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,
பெயல் உறு நீலம் போன்றன விரலே,
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே.

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார் திணை

பொருள்:

ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின் கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய ‘குடவாயில்’ என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *