• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Apr 28, 2024

நற்றிணைப்பாடல் 366:

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!

பாடியவர்: மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் திணை: பாலை

பொருள்:

நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; நீலமணி போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார்.