• Tue. Apr 30th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Mar 13, 2024

நற்றிணைப்பாடல் 339:

‘தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது?’ என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும், அன்னை – சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார் திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து (“நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?” என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இவ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *