• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 11, 2024

நற்றிணைப்பாடல் 338 :

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
‘நிறுத்தல் வேண்டும்’ என்றி; நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே! – மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

பாடியவர்: மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் திணை: நெய்தல்

பொருள்:

கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; அகன்ற பெரிய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, ‘நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்’ என்று கூறாநின்றனை; இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ?