• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 9, 2024

நற்றிணைப்பாடல் 336:

பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல் – அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
இரை தேர் எண்கினம் அகழும் வரை சேர் சிறு நெறி வாராதீமே!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி

பொருள்:

சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே! மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின் கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!