• Fri. Jan 17th, 2025

இலக்கியம்:

Byவிஷா

Mar 6, 2024

நற்றிணைப்பாடல் 334:

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன் மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ – தோழி! – நம் இன் உயிர் நிலையே?

திணை: குறிஞ்சி

பொருள்:

தோழீ! கரிய விரலையும் சிவந்த முகத்தையுமுடைய பெருங்கூட்டமாகிய முசுக்களைச் சுற்றமாகவுடைய பெண்குரங்கு; பெரிய மலைப்பக்கத்து அருவியில் விளையாடி; உயர்ந்த மூங்கிலிலேறி அதன் நுனியை ஊசலாகக் கொண்டு ஊசலாடி; மலையில் வேங்கையின் அழகிய நறிய மலர் அங்குள்ள சுனையிலே மிக உதிர்ந்து விழும்படி அதன் கிளையிலேறிக் கடுவனொடு புணராநிற்கும் மலையகநாடன்; மழை பெய்கின்ற மாந்தர் இயங்குதற்கரிய இருள்நிறைந்த நடுயாமத்தில்; அருவியையுடைய மலைப்பக்கத்தின் கண்ணதாகிய நெறியில் ஒப்பற்ற வேற்படையை யேந்தி; மழையின் மின்னலானது இருளைப் பிளக்க அம்மின்னல் விளக்கத்தில் வருவதாகக் கருதினனென்றால்; அவன் வருநெறியை நினைந்து வருந்துகின்ற நம்முடைய இனிய உயிர் இனி எவ்வாறு நிலைத்திருக்குமோ? அறிகின்றிலேன்.