• Tue. Apr 30th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Mar 4, 2024

நற்றிணைப்பாடல் 332:

இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ
‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?

பாடியவர்:- குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார் திணை: குறிஞ்சி

பொருள்:

இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *