• Sun. May 12th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Feb 19, 2024

நற்றிணைப்பாடல் 320:

‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில் காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே

பாடியவர் : கபிலர் திணை : மருதம்

பொருள்:

ஊரிலே செய்யப்படுந் திருவிழாவுஞ் செய்து முடிந்தது; மத்தளமும் ஓசை யொழிந்தது; இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *