• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jan 29, 2024

நற்றிணைப்பாடல்: 314

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்’ என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

பாடியவர் : முப்பேர் நாகனார்

திணை : பாலை

பொருள்:

நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்; ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; ‘கங்குல் கழியக்கடவதாக’ என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக.