• Sun. May 5th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Dec 10, 2023

நற்றிணைப் பாடல் 311:

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே – தோழி! – நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர் நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

பாடியவர் : உலோச்சனார்

திணை : நெய்தல்

பொருள் :

தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; அங்ஙனம் மழைபெய்யாது வறந்து விட்டாலோ, பெரிய கழிநீரிடத்து முள்ளிச்செடியின் மலருதிர்ந்து பரந்து சேறெல்லாம் ஒருசேரக் காய்ந்து கரிய கழிச் சேற்றிட மெங்கும் வெள்ளையாகிய உப்பு விளையாநிற்கும் பெருமையுடைய தாயிராநின்றது; இவையேயுமன்றிக் கொழுத்த மீன்சுடுபுகை தெருக்களினுள்ளே கலந்து சிறிய மலரையுடைய ஞாழல் மரங்கள் மிக்க துறையும் இனியதாயிராநின்றது; இவ்வளவு வளம் வாய்ந்த நம்மூர்க்கண் உள்ள கடற்கரைச் சோலையொன்றுமோ ஊரார் எடுக்கும் ஒரு பழியை உடையதாயிராநின்றது; அதுதான் யாதோ வெனில்; கரிய கிளையையுடைய புன்னை மலரில் உள்ள தேனைப் பருகிக் களிப்பினையுடைய கரிய வண்டுகள் நன்னிமித்தமாக எதிர்வந்து ஒலியாநிற்ப; நங் காதலராகிய அவர் வருகின்ற நெடிய தேரின் செவிக்கு இனிய ஓசையைக் கேட்பதுதான் அரியதாயிராநின்றது; இவ்வருமையொன்று இல்லையாய்விடின் நம்மூருஞ் சோலையும் மேதக்கன வாதலொடு அவர்வந்து நம்மைக் கூடின் அதுவும் மிக்க நல்லதாக நமக்குத் தோன்றுங்காண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *