• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 29, 2023

நற்றிணைப் பாடல் 285:

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் – உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி – தோழி! – என்றும்,
அயலோர் அம்பலின் அகலான், பகலின் வரூஉம், எறி புனத்தானே.

பாடியவர்: மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
திணை: குறிஞ்சி

பொருள் :

தோழீ! வாழ்வாயாக! திண்ணிய கையையுடைய கானவன் தனது வெய்ய வில்லை வளைத்து வலிய கணையை எய்து நெஞ்சிலே பாய்த்திக் கொன்ற முட்பன்றியேற்றையைக் கைக்கொண்டு; வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி; மனையகத்துள்ள நாய்கள் எல்லாம் ஒரு சேரப் பக்கத்திலே வந்து குரைத்து விளையாட; காட்டகத்துள்ள நட்டகாலிலே கை சேர்த்துப் பிணித்த தானிருக்கும் குடிசையையுடைய சேரியின்கண்ணே செல்லாநிற்குங் குன்ற நாடன்; பாம்புகள் தமக்கு வேண்டிய இரையைத் தேடி உழலாநின்ற இயங்குதற்கரிய இருள்மிக்க இரவு நடுயாமத்தில்; நம்பால் வருவதல்லாமலும்; எப்பொழுதும் அயலவர் கூறும் பழிச்சொல்லைக் கேட்டும் அகன்றுபோகானாகி; வெட்டியுழுது விதைத்த தினைப்புனத்தின் கண்ணே பகற் பொழுதினும் வாராநின்றான்; ஆதலின் அவனுடைய நட்பானது நமக்கு நல்லதோ? நல்லதன்றாயிற்றுக் காண்.